நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
ஒருவழியாக தமிழகத்தில் புயல் கரையை கடந்துள்ள நிலையில் இன்னும் தமிழக எல்லையில் தான் இருக்கின்றது. வேலூர் அருகே இந்த புயல் மெதுவாக நகர்ந்து கொண்டே இருப்பதால் அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்த புயல் இன்னும் சில மணி நேரத்தில் ஆந்திராவிற்கு செல்லும். நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெறும் ஐந்து மணி நேரத்தில் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. மரக்காணம் பகுதியில் இதன் பாதிப்பு கடுமையாக ஏற்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சென்னை, வேலூர், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. குடிசை வீடுகள் பல சேதமடைந்துள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாலைகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. கடலூரில் இந்த புயலால் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு பாதிப்பு இல்லை என்றாலும் அதிக அளவில் மரங்கள் விழுந்துள்ளன.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் குளம் போல் காட்சியளிக்கின்றது. டி நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, கோயம்பேடு, கேகே நகர், அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை முழுக்க பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன.
வேளச்சேரியில் சாலைகள் மற்றும் தெருக்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அடையாறு எல்லை ஓரங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. புயல் சேதம் குறித்து தற்போது வரை முதல்கட்ட விவரங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. முழு பாதிப்பு குறித்த விவரங்கள் இனிமேதான் அரசு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.