பெட்ரோல், டீசல் மீதான வரியாக மட்டும் ரூ.22 லட்சம் கோடி வருவாய் மத்திய அரசுக்கு கிடைத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எண்ணெய் நிறுவனங்களுக்காக வெளியிட்ட ரூ.1,40,000 கோடிக்கான கடன் பத்திரங்கள் காரணமாக தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் வரி மீதான வரியை குறைக்க முடியவில்லை என்று கூறினார்.
இந்த கடன் பத்திரங்களுக்கு இதுவரை ரூ.70,000 கோடிக்கு மேல் வட்டி கட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடன் பத்திரங்கள் முதிர்ச்சி அடைவதால் அவற்றுக்கான தொகையை திரும்ப தரவேண்டி உள்ளதாகவும் இதன் காரணமாக பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாத நிலையில், மத்திய அரசு உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதில், பெட்ரோல், டீசல் மீது வரி மீது வரி விதித்து கடந்த 7 ஆண்டுகளில் மக்களிடம் இருந்து ரூ. 22 லட்சம் கோடியை மத்திய அரசு பறித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் பத்திரங்களுக்கு இதுவரை ரூ.3500 கோடி மட்டுமே பணம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள அவர், இந்த விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பொய் கூறி வருவதாக சாடினார். காங்கிரஸ் ஆட்சியில் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டதாகவும் அதற்கு உரிய மானியமும் உடனுக்குடன் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.