புரெவி புயல் காரணமாக கொடைக்கானல் மலை பகுதியில் இன்று இரவு முதல் பேருந்துகள் இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புரெவி புயலாக நேற்று வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த புரெவி புயல் இலங்கை அருகே திரிகோணமலையில் கரையை கடந்தது. மேலும் நாளை இந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் மலைப் பகுதிக்கு இன்று இரவு 7 மணி முதல் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வத்தலகுண்டு, பழனி, அடுக்கம் சாலையில் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.