வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் நாளை மறுநாள் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை மன்னார் வளைகுடா பகுதியை கடந்த பிறகு டிசம்பர் 4ஆம் தேதி தென்தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கிறது.
அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும். மேலும் புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.