சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி நோக்கி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ரயில் புறப்படும் நேரம் என்பதால் பயணிகள் அவசரம் அவசரமாக ரயில் நிலையத்துக்குள் ஓடி, வந்து கொண்டிருந்தனர். மேலும் பலர் அடித்து பிடித்து ரயிலில் ஏறிக்கொண்டு இருந்த போது, அந்த பிளாட்பாரத்தில் ரயில்வே பெண் போலீஸ் மாதுரி என்பவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதையடுத்து சரியாக இரவு 11.30 மணிக்கு ரயில் ஒன்று புறப்பட்டது.
அப்போது ரயிலில் இருந்த ஆண் பயணி ஒருவர் திடீரென தவறி பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் இடையே விழுந்தார். உடேனே இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் மாதுரி ஓடி சென்று அந்த பயணியின் கையை பிடித்து இழுத்து நடைமேடைக்கு கொண்டு வந்துள்ளார். இதன் பிறகு, இயல்பு நிலைக்கு திரும்பிய அந்த பயணி தனது உயிரை காப்பாற்றிய பெண் காவலர் மாதுரிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனால் அங்கிருந்த ரயில் பயணிகளும் காவலர் மாதுரியை வெகுவாக பாராட்டியுள்ளனர்.