Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“புறம்போக்கு நிலத்தில் மாற்றுத்திறனாளியின் வீடு” அதிகாரிகள் எடுத்த முடிவு…. பொதுமக்கள் போராட்டம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள வட்டகோட்டை அஞ்சுவரிக்கவிளையில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளி ஜான்சன் (59. திருமணமாகாத இவர், கிள்ளியூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர் பல வருடங்களாக பாலூர் குளத்தையொட்டியுள்ள கால்வாய் கரையில் சாலையோர புறம் போக்கு நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கருங்கல் காவல்துறையினருடன் ஜான்சனின் வீட்டை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து மாநில வணிகர் சங்க துணைத் தலைவர் ஜார்ஜ், இந்து முன்னணி கிள்ளியூர் ஒன்றிய தலைவர் மணிகண்டன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அங்கு வந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் ஜெயச் சந்திரன், பாலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது “புதுக்கடையிலிருந்து தொடங்கி அனைத்து சாலையோர ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால் மட்டுமே மாற்றுத்திறனாளியின் வீட்டை இடிக்க அனுமதிப்போம். ஆகவே தனியாக இந்த வீட்டை மட்டும் இடிக்க அனுமதிக்க மாட்டோம்” என்று பொதுமக்கள் உறுதியாக கூறினர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் வீட்டைஇடிக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Categories

Tech |