வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண புலம்பெயர் தமிழர் நல வாரியம் – தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தொண்டு செய்வாய் – துறை தோறும் துறை தோறும் துடித்தெழுந்தே” என்ற வாசகத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களது தலைமையிலான தமிழக அரசு நாள்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பரந்து கிடக்கும் இவ்வுலகில் எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு என்பதை நன்குணர்ந்து, உலகத் தமிழர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டும் அல்ல அவர்களை அரவணைப்பதும் பாதுகாப்பதும் தாய் திருநாடான தமிழ்நாடு தான் “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்பதை இலட்சிய முழக்கமாக கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கென நலத்திட்டங்கள், அவர்களுக்கான தூதரக உதவிகள், செம்மொழியாம் தமிழ் மொழியை தழைத்தோங்கச் செய்திட வெளிநாடுகளில் தமிழ் கல்வி கலை பண்பாடு மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கென பல்வேறு சீர்மிகு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
அந்த வகையில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திடவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கம் 2011 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் நாள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது அரசால் இயற்றப்பட்டது. அதோடு புலம்பெயர் தமிழர் நல வாரியம் ஒன்று உருவாக்கப்பட்டு அவர்களுக்கென நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அப்போது அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது முந்தைய ஆட்சியாளர்கள் அதனை நடைமுறைப்படுத்த முன் வரவில்லை.
இந்த நிலையில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பிறகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கீழ்காணும் தலைவர் அரசு சார் அலுவலர்கள் மற்றும் அயலகத் தமிழர் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டு புலம்பெயர் தமிழர் நல வாரியத்தினை அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் பழைய கோட்டையைச் சேர்ந்த திரு கார்த்திகேய சிவசேனாபதி அவர்களும், மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் திரு. ஆறுமுகம் பரசுராமன், லண்டனில் வசிக்கும் திரு. முஹம்மது பைசல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் திரு. சித்திக் சையது மீரான், வட அமெரிக்காவில் வசிக்கும் திரு கால்டுவெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் திரு ஜி.வி ராம் என்கிற கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் திரு. அ மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்கறிஞர் திரு புகழ்காந்தி ஆகியோர் அரசு சாரா உறுப்பினர்களாகவும்,
அரசு சார்ந்த உறுப்பினர்களாக பொதுத்துறை செயலாளர் உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், வெளிநாடு வாழ் தமிழர் தொடர்பான பணிகளை கவனித்து வரும் அரசு சிறப்பு செயலாளர்/ அரசு இணைச் செயலாளர்/ அரசு துணைச் செயலாளர் பொதுத்துறை மேலாண்மை இயக்குனர் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தின் ஆணையர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாரியத்தில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகள் ஆகும்.
இவ்வாரியம் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக 5 கோடி ரூபாய் ‘வெளிநாடு வாழ் தமிழர் நலநிதி’ என மாநில அரசின் முன் பணத்தை கொண்டு உருவாக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் மூலதனச் செலவினமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
இவ்வாரியத்தின் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவாக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை சேகரிப்பது அவசியமாதலால் அவர்கள் குறித்த தரவு தளம் (database) ஒன்று ஏற்படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து ஆயுள் காப்பீடு திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும் வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்த தமிழர்கள் அங்கு பணியின் போது இறக்க நேரிடின் அவர்களது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்குடன் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை வழங்கப்படும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களது இத்தகைய முனைப்பான நடவடிக்கை வெளிநாடுகளில் தேமதுர தமிழோசை பரவுவதற்கும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் இன்னல்களை போக்குவதற்கும் அவர்களுக்கான நலத்திட்டங்களை செம்மையுர செயல்படுத்துவதற்கும் உறுதுணையாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” – தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆணையிட்டுள்ளார். pic.twitter.com/oRFSGgv50k
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 19, 2022