புல்வமா தாக்குதல் பாகிஸ்தானின் வெற்றி என்று கூறிய அமைச்சருக்கு பிரதமர் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்திய பகுதியான புல்வாமாவில் வைத்து ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலினால் 40 சிஆர்பிஎப் படையினர் வீரமரணம் அடைந்தனர். சமீபத்தில் அந்த தாக்குதலை மேற்கோளிட்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சௌத்ரி பேசினார். அப்போது இம்ரான் கான் தலைமையில் புல்வாமா தாக்குதல் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என கூறினார்.
அவரது இந்த கருத்து உலக அரங்கில் பெரும் தர்மசங்கடத்தை பாகிஸ்தானுக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு நேரடியாக வந்து விளக்கம் கொடுக்குமாறு பிரதமர் இம்ரான்கான் சௌத்ரிக்கு சம்மன் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இம்ரான்கான் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.