காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2019ம் ஆண்டு பிப்ரவரி 14தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்து கொண்டிருந்த போது, அவந்திபோராவில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வீரர்களின் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உடல் சிதறி பலியானார்கள்.
இந்த கோர சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவுற்ற நிலையில், இந்த சம்பவத்தில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு உதவியாக இருந்ததாக ஜம்முவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த பிப்.,28 ல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் காடுத்த ஷாகீர் பசீர் என்பவன் கைது செய்யப்பட்டான்.
அவனிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பீர் தாரிக் மற்றும் அவரது மகள் இன்ஷா ஆகியோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீர் தாரிக் மற்றும் அவரது மகள் இன்ஷா ஆகியோர் இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு உதவியதாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.