ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் திரட்டும் நோக்கில் ‘புஷ்ஃபயர் பாஷ்’ கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் பாண்டிங் தலைமையிலான அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும் மோதும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பாண்டிங் அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பயிற்சியாளராகவும், கில்கிறிஸ்ட்டின் அணிக்கு டிம் பெய்ன் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
மேலும் இந்த அணிகளில் ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான பிரையன் லாரா, கர்டனி வால்ஷ், ஹேடன், பிரட் லீ, வாட்சன், ஹோட்ஜ், யுவராஜ் சிங், பிராட் ஹாடின், டேனியல் கிறிஸ்டியன், சைமண்ட்ஸ், வாசிம் அக்ரம் உள்ளிட்ட வீரர்களும் லிட்ச்ஃபீல்டு, வில்லானி உள்ளிட்ட வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
மெல்போர்னில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கில்கிறிஸ்ட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இப்போட்டி பத்து ஓவர்கள் ஆட்டமாக நடத்தப்பட்டது. அதன்படி முதலில் ஆடிய பாண்டிங் லெவன் அணி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லாரா 11 பந்துகளில் 30 ரன்களைச் சேர்த்தார்.
இதைத் தொடர்ந்து 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கில்கிறிஸ்ட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை பாண்டிங் அணியிடம் அளித்தது. இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் ஜாலியான கிரிக்கெட்டை மட்டுமே வெளிப்படுத்தினர். மைதானத்தில் இரு அணிகளாக அவர்கள் மோதிக் கொண்டாலும் நண்பர்களுடன் விளையாடும் போது இருப்பது போன்றே சின்னஞ்சிறு சேட்டைகள் செய்த வீரர்கள் மகிழ்ச்சியாகக் காணப்பட்டனர்.
இப்போட்டியில் இடையே ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் கோரிக்கையை ஏற்று சச்சின் டெண்டுல்கர் சுமார் ஐந்தரை ஆண்டுகள் கழித்து மீண்டும் கிரிக்கெட் விளையாடினார்.
இந்தப் போட்டியின் மூலம் காட்டுத்தீ நிவாரணமாக சுமார் 7.7 மில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகம் அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 36 கோடிக்கும் அதிகமான தொகையாகும்