பூங்காவில் விளையாட சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சக்தி நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் 45 வயதுடைய வரதன் மனைவி 32 வயதுடைய நிஷா மற்றும் இரண்டு மகன்கள் இப்பகுதியில் குடியிருந்தனர். தந்தை வரதன் கூலித் தொழில் செய்து வருபவர். மூத்த மகனான 8 வயது கௌதம் நேற்று மதிய வேளையில் வீட்டிற்கு அருகிலுள்ள பீர்க்கன்காரணை பேரூராட்சி பூங்காவிற்கு விளையாடச் சென்றுள்ளான்.
விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த மின்விளக்கின் , மின்கம்பியானது வெளியே தொங்கும் நிலையில் இருந்தது. இந்த மின் கம்பி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது உரசி அதிலிருந்து மின்சாரம் சிறுவன் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்தான். வெகு நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பூங்காவிற்கு சென்ற தாய், மகன் மின்சார கம்பியை பிடித்தவாறு கீழே விழுந்து இருப்பதைக்கண்டு அலறி உள்ளார்.
அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் சிறுவனை அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவன் கவுதமை பரிசோதித்தபோது, அவன் இறந்து வெகு நேரமாகிவிட்டது, என்று மருத்துவர்கள் கூறினர். அதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆகியோர் ஆத்திரமடைந்து, சிறுவன் இறந்ததற்கு காரணமான பீர்க்கன்காரணை பேரூராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தாம்பரம் -முடிச்சூர் பகுதி பிரதான சாலையில் உள்ள கிருஷ்ணா நகரில், சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் மற்றும் பணி புரியும் போலீசார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ,இறப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் எடுத்துரைத்து கூட்டத்தை கலைத்தனர். பின் சிறுவனின் உடலை கைப்பற்றி பீர்க்கன்காரணை போலீசார் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.