பூங்காவில் நடைபெற்று வரும் பணியை விரைவில் முடிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் நூறு ஆண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தகிரி இன மக்களின் குல தெய்வ கோவில், சிறுவர் விளையாட்டு பூங்கா, வண்ண மலர்கள், ரோஜா பூந்தோட்டம், அழகிய புல் தரைகள் ஆகியவை அமைந்துள்ளன. இந்நிலையில் கோடைகாலத்துக்கு முன்னதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவை அழகாக வடிவமைப்பதற்கு 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் பேரூராட்சி சார்பில் பூங்காவை அழகுபடுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்றுள்ளது. தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பூங்காவிலுள்ள சுற்றுப்புற பாதுகாப்பு சுவர் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால் காட்டெருமைகள் மற்றும் பன்றிகள் கூட்டமாக புகுந்து அழகிய புல் தரைகளை மிதித்து நாசம் செய்துள்ளன.
மேலும் பூங்காவில் மலர்ந்துள்ள ரோஜா மலர்கள் மற்றும் செடிகளை சேதம் செய்து வருகின்றன. இதன் காரணமாக பூங்கா தற்போது பொலிவிழந்து காணப்படுவதால் விரைவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டால் மட்டுமே கோடை காலத்தில் காய்கறி கண்காட்சிக்கு முன்னதாக அதனை பராமரித்து அழகுபடுத்த முடியும். எனவே பணிகளை வெகுவாக செய்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.