மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் தொழிலாளி தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது 2-வது மகளுக்கு உடல்நல குறைபாடு இருந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் தொழிலாளி தனது உறவினர் ஒருவரின் பேச்சை கேட்டு தனது 2 மகள்களுடன் பேச்சிப்பாறை அருகில் இருக்கும் மணலோடை பகுதியில் வசிக்கும் மந்திரவாதி சேகர் என்பவரை சந்தித்து பேசியுள்ளார்.
இதனையடுத்து பூஜைகள் செய்து எண்ணெய் தடவியதால் 2-வது மகளின் உடல் நலக்குறைபாடு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகியுள்ளது. இதனால் மந்திரவாதி மீது தொழிலாளிக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உனது குடும்பத்தில் செய்வினை கோளாறு இருப்பதாக தொழிலாளியிடம் மந்திரவாதி கூறியுள்ளார். அதன் பிறகு மூன்று நாட்கள் உங்கள் வீட்டில் தங்கியிருந்து விடிய விடிய பரிகார பூஜை செய்தால் மட்டுமே கோளாறு நீங்கும் என தெரிவித்துள்ளார். அவர் கூறியதை நம்பிய தொழிலாளி தனது 2 மகள்களையும் மந்திரவாதி சேகரின் வீட்டில் தங்கியிருக்க சம்மதித்துள்ளார்.
இந்நிலையில் மூத்த மகளான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தனக்கு வயிறு வலிப்பதாக அந்த மாணவி தொழிலாளியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவியிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
அதாவது பூஜைக்கு தங்கியிருந்தபோது மந்திரவாதி மாணவியை தனியாக அழைத்து சென்று மிரட்டியுள்ளார். அப்போது எனக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் உன் குடும்பத்தை அழித்து விடுவேன் என மிரட்டி மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து தொழிலாளி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.