பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து ஜம்முவின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோதி மாவட்டங்களை தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இணைக்கும் முகலாய சாலை வழியாக தேரா கி காலி வனப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த இரண்டு பகுதிகளிலும் தேடுதல் குழுக்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டு பிடித்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அந்த பதுங்கு குழியில் இருந்து 100 வெடி மருந்துகள், உணவு பொருட்கள், காலணிகள், காலுறைகள் மற்றும் டார்ச் போன்றவை கைப்பற்றப்பட்டு இருக்கிறது.