கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டையம் பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மணிகண்டன் என்ற டிரைவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மணிகண்டனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும் சந்தியா, சௌமியா, யுவராஜ் என்ற மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மணிகண்டன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மேலும் வீட்டில் அவரது பிள்ளைகளும் மனைவியும் இருந்துள்ளனர். காலை 8 மணி ஆகியும் மணிகண்டன் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மேலும் மணிகண்டனின் வீட்டிலிருந்து கேஸ் கசியும் வாசனையும் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டனின் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சரஸ்வதி, சந்தியா, சௌமியா, யுவராஜ் ஆகிய நான்கு பேரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில் மயங்கிய நான்கு பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் சிகிச்சை பெற்று வரும் அவர்களால் சரியாக பேச முடியவில்லை. இதனால் அவர்கள் எவ்வாறு மயங்கினார்கள் என்பது குறித்த முழுமையான தகவல் தற்போது வரை கிடைக்கவில்லை மேலும் அவர்கள் நான்கு பேரையும் யாரேனும் கொலை செய்யும் நோக்கில் இவ்வாறு செய்தனரா? அல்லது குடும்பத்தோடு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? போன்ற பல்வேறு சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது-