சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6-வது தெருவில் சக்திவேல்- துலுக்காணம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் சென்னை மாநகராட்சி 128 வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தனர். திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கணவன் – மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தது.
இதனால் அக்கம்பக்கத்தினர் அவர்கள் வெளியே சென்றிருக்கலாம் என நினைத்தனர். அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்திவேல் தூக்கில் தொங்கிய நிலையிலும், துலுக்காணம் கட்டிலில் படுத்த நிலையிலும் பிணமாக கிடந்துள்ளனர்.
இதனையடுத்து போலீஸ் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இல்லாத காரணத்தினால் இருவரும் திட்டமிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பாக்குவாதத்தில் மனைவியை கொன்று விட்டு கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.