அடுத்தடுத்த வீடுகளில் பணம் மற்றும் நகை திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட த்தைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் ஊட்டியில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நாச்சிமுத்து தனது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது 8 பவுன் தங்க நகை மட்டும் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் ஊட்டி மத்திய போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்த துவங்கியுள்ளனர். இதில் நாச்சிமுத்து தங்கி இருந்த வீட்டின் அருகில் இருக்கும் மற்றொரு வீட்டிலும் ரூபாய் 1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
இதற்கிடையே வீடுகளில் இருந்த கதவு மற்றும் பீரோவில் இருந்த பூட்டு உடைக்கப்படாமல் பணம் மற்றும் நகைகள் திருடு போனதால் இவர்களுக்கு நன்றாக தெரிந்தவர்கள் தான் இந்த சம்பவத்தை செய்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகத்துள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஷாலினி என்பவர் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் அனைத்தும் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். குறிப்பாக திருட்டு நகைகளை வாங்கியதாக நகை கடை உரிமையாளர் ஒருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.