விலை சரிவின் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை விவசாயம் விவசாயிகளின் மூல தொழிலாக உள்ளது. இதனையடுத்து உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு போன்ற மலை காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். சில விவசாயிகள் புரூக்கோலி, ஐஸ்பெர்க் போன்ற இங்கிலீஷ் காய்கறிகளையும் விளைவிக்கின்றனர். இங்கு விளையும் பூண்டு நல்ல காரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் இருப்பதால் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். இந்நிலையில் கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கட்டபட்டு, பனஹட்டி, மிழிதேன், கக்குச்சி, பில்லிக்கம்பை போன்ற கிராமங்களில் விவசாயிகள் பூண்டு பயிரிட்டுள்ளனர்.
இவை அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கொரோனா காலத்தில் ஒரு கிலோ பூண்டுக்கு ரூபாய் 200 முதல் 300 வரை லாபம் கிடைத்தது. ஆனால் தற்போது ஒரு கிலோ 20 முதல் 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் தொழிலாளர் பற்றாக்குறை, வன விலங்குகள் தொல்லை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். எனவே கொள்முதல் விலை அதிகரித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்கும். இதனால்தான் அறுவடை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறியுள்ளனர்.