செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நான் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச்சுக்கான ரசீதை வெளியிட திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 75 ஆண்டுகளாக எந்த அரசியல்வாதியும் செய்யாததை வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் நான் செய்யப்போகிறேன். ரஃபேல் வாட்ச்சுக்கான ரசீது மட்டுமல்லாமல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் வேலை பார்த்தபோது பெற்ற ஊதியம், அதற்கான செலவு விபரங்கள், கிரெடிட் கார்டு பில் விபரங்கள் உள்பட எனது சொத்து விபரங்கள் அனைத்தையும் வெளியிடுவேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய சொத்து பட்டியலையும் வெளியிடுவேன். எனது சொத்து மதிப்பை வெளியிடும் அதே நாளில், முதலமைச்சர் மட்டுமல்லாது, அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்களின் உண்மையான சொத்து அடங்கிய பட்டியலையும் வெளியிடுவேன். மு.க.ஸ்டாலின் சொந்தமாக கார் இல்லை என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். அவர் எந்த கார் வைத்துள்ளார் என்பதையும் சொல்வேன். பூனைக்கு மணிகட்டும் நேரம் வந்துவிட்டது. திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.