2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு பாரதியார் மற்றும் குடியரசுதின விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 8 வட்டங்களில் கால் பந்து, கையுந்து பந்து, கபடி, ஆக்கி, கூடைப்பந்து, மேஜைப்பந்து, எறிபந்து, கைப்பந்து, இறகுப்பந்து, பூப்பந்து, கோ-கோ, மென்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கால்பந்து போட்டியானது நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன் தலைமை தாங்கி போட்டியை துவங்கி வைத்தார்.
அத்துடன் மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியில் நாமக்கல் நகரவை உயர்நிலைப் பள்ளி, தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளிகள் பங்கேற்றது. இவற்றில் கீரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடம் மற்றும் நாமக்கல் தெற்கு அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளி 2ஆம் இடம் பிடித்தது. அதேபோன்று கூடைப் பந்து போட்டியில் ரெட்டிப்பட்டி பாரதி வித்யாலயா, நகரவை உயர்நிலை பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணிகள் பங்கேற்றது.
இவற்றில் பாரதி வித்யாலயா பள்ளி முதலிடமும், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 2ஆம் இடமும் பிடித்தது. அதனை தொடர்ந்து பூப்பந்து போட்டியில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அங்காநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஸ்பெக்ட்ரம் அகாடமி, நாமக்கல் நகரவை உயர்நிலைப்பள்ளிகள் பங்கேற்றது. இந்த போட்டியில் நாமக்கல்மாவட்ட தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், அலங்காநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி 2ஆம் இடமும் பெற்றது. இதற்குரிய ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்பு செழியன் போன்றோர் செய்திருந்தனர்.