மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய தகவல் வெளியாகியுள்ளது
உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பலராலும் பாடும் நிலா என அன்போடு அழைக்கப்படும் அவர் உயிரிழந்தது சினிமாத் துறை மட்டுமல்லாது, பல்வேறு துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி தாமரைபக்கத்தில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவர்களின் பூர்வீக வீடு ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் நெல்லூரில் இருந்து எஸ்பிபி அவர்களும் குடும்பத்தினரும் சென்னைக்கு குடி வந்து விட்டதால் அவர்களது பூர்வீக வீடு அப்படியே இருந்துள்ளது. இதனையடுத்து அதை வேத பாடசாலையாக மாற்றுவதற்கு எஸ்பிபி அவர்கள் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை சந்தித்து கடந்த பிப்ரவரி மாதம் சங்கர மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கியுள்ளார். பாரம்பரியமிக்க எஸ்பிபியின் குடும்பத்தில் எஸ்பிபியின் தந்தை சங்கீத மும்மூர்த்திகளில் தியாகராஜ சுவாமிகளின் தீவிர பக்தர்.
இதனால் அவர்களது பூர்வீக வீட்டில் பல கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடியுள்ளனர். இந்நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சார்பாக எஸ்பிபி அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது. அதில், “இசை உலகத்தின் நாயகனாக விளங்கி வந்த எஸ்பிபி இறப்பு இசை உலகிற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். சினிமா பாடல்களுக்கு அப்பாற்பட்டு ஆன்மீகத்திலும் மிகுந்த பற்றுக் கொண்டவராக எஸ்பிபி விளங்கினார்.
அதற்கு எடுத்துக்காட்டாக பல பக்திப் பாடல்களை பாடி மக்கள் மத்தியில் பரப்பினார். சங்கராச்சாரியார்கள் மீதும் காஞ்சி சங்கர மடத்தின் மீதும் அதீத பக்தி கொண்ட எஸ்பிபி நெல்லூரில் இருக்கும் அவரது பூர்வீக வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் வேத பாடசாலை தொடங்க மடத்திற்கு தானமாக கொடுத்தார். தற்போதைய சூழலில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன அமைதி நிலைத்திட மஹாத்திரிபுரசுந்தரி சமேத சந்திர மௌலீஸ்வரர் சாமியை மனதார வேண்டுகிறோம்” என கூறப்பட்டுள்ளது