பூவே உனக்காக சீரியலில் இருந்து நடிகர் அருண் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ‘பூவே உனக்காக’. இந்நிலையில் இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ‘நான் பூவே உனக்காக சீரியலை விட்டு வெளியேறுகிறேன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இனிமேல் என்னை நீங்கள் கதிராக பார்க்க முடியாது. இந்த சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய எனது தயாரிப்பாளருக்கும், சன் டிவிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எனது நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. கவலைப்பட வேண்டாம் விரைவில் ஒரு நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன். எனக்கு எப்போதும் உங்கள் அன்பும், ஆதரவும் தேவை’ என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இந்த சீரியலில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜோவிதா தனது மேற்படிப்புக்காக இந்த சீரியலை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பூவே உனக்காக சீரியலின் கதாநாயகனே விலகுவதால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.