Categories
மாநில செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி: கோவை கல்லூரி மாணவர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றி அனைத்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி போன்றோர் தலைமை தாங்கினர். மக்கள் நல்வாழ்வுதுறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், கலெக்டர் சமீரன், மருத்துவ கல்வி கழக இயக்குனர் நாராயண பாபு போன்றோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து மா.சுப்பிரமணியன் அவர்கள் நிருபர்களிடம் பேசியதாவது “தமிழகத்தில் கடந்த 2008 ஆம் வருடம் முதலமைச்சராக இருந்த கருணாநிதிதான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கென தனியாக ஒரு ஆணையத்தினை துவங்கி வைத்தார்.

இந்த ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட முதல் இன்று வரையிலும் மூளைச்சாவு அடைந்த 1,524 பேரிடமிருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. கிண்டியில் குரங்கம்மை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள ஒரு ஆய்வு கூடத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இனிமேல் பரிசோதனை மாதிரிகள் புனேவிற்கு அனுப்ப வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசியை 3 கோடியே 87 லட்சத்து 84 ஆயிரத்து 323 நபர்களுக்கு செலுத்த வேண்டும். எனினும் தற்போதுவரை 37 லட்சத்து 33 ஆயிரத்து 950 நபர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் 3½கோடி நபர்களை இலக்காக நிர்ணயித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியானது நடந்து வருகிறது.

அந்த வகையில் வரும் 7-ஆம் தேதி 50ஆயிரம் இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற இருக்கிறது. சென்னையை அடுத்து கோவையிலும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பூஸ்டர்டோஸ் தடுப்பூசி போடப்படும். மருத்துவத்துறையிலுள்ள 4,308 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் ரூபாய்.36.60 லட்சமும், இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்திற்கு நவீன உபகரணங்கள் வாங்கவும் ரூ.34.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மரபியல் மற்றும் மரபுசார் அரியவகை நோய்களுக்காக 3 ஒப்புயர்வு மையங்கள் ரூபாய்.2.73 கோடியில் ஏற்படுத்தப்பட இருக்கிறது. ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டண மருத்துவ படுக்கைகள், புதிய ரத்த சுத்திகரிப்பு எந்திரம் மற்றும் நவீன உபகரணங்கள் ரூபாய்.13 லட்சம் மதிப்பீட்டிலும், அவசர சிகிச்சை மீட்பு மையம் ரூபாய்.53 லட்சம் மதிப்பீட்டிலும் ஏற்படுத்தப்படவுள்ளது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |