மக்களுக்கு போடப்படவிருக்கும் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி நல்லதொரு பலனை தரும் என கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தடுப்பூசி போடாதவர்களே ஐசியூவில் சேர்க்கப்படும் நிலைக்கு ஆளாகின்றனர் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் அதிக அளவு எதிர்ப்பு சக்தியை அளிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கோவாக்சின் தடுப்பூசி தயாரித்த பாரத் பயோடெக் சேர்மனும், டாக்டருமான கிருஷ்ண ஏலா கூறியதாவது, கோவாக்சின் தடுப்பூசி நீண்ட நாட்களுக்கு நல்லதொரு பலனை தந்துள்ளது. எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது போல் 3வது பூஸ்டர் தடுப்பூசி மிக உதவியாக இருக்கும். குழந்தைகள் ,பெரியவர்கள் என கோவாக்சின் தடுப்பூசி உலகம் முழுவதும் பயன்படுத்தலாம். கோவாக்சின் போட்ட 90 சதவீதத்தினர் இந்த தொற்றுக்கு எதிரான சக்தியை பெற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .3 வது டோஸ் போட்டுக் கொள்வதினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே எதிர்மறையான சிந்தனைகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.