பெங்களூருவில் அப்பார்ட்மெண்ட் வீட்டில் தாய் மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிசிடிவி பதிவுகள் கிடைத்துள்ளன.
பெங்களூரு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சன்னவீராசாமி-சந்திரகலா தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். இரண்டாவது குழந்தைக்கு நான்கு வயது ஆகிறது. சன்ன வீராசாமி அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சந்திரகலாவின் சகோதரி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு திறக்கப்பட்டடு இருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த சந்திரகலாவின் சகோதரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ரத்தவெள்ளத்தில் சந்திரகலா மற்றும் அவரது 4 வயது குழந்தையும் சடலமாக கிடந்துள்ளது. இதையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரகலாவின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரின் உடலிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட கத்தி குத்துகள் இருந்துள்ளன. கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது சந்திரகலாவின் கணவர் வேலைக்கு சென்ற பின்பு அங்கு மர்ம நபர் ஒருவர் வீட்டுக்கு வந்ததாகவும், அந்த நபர் மதியம்வரை அங்கே இருந்ததாகவும் பின்னர் மதியத்திற்கு பிறகு வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.