இலங்கையில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சிலோன் பெட்ரோலியம் நிறுவனமானது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 77 ரூபாயும், டீசல் விலையை 55 ரூபாயும் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு பெட்ரோல் லிட்டருக்கு 254 ரூபாயாகவும், டீசல் 176 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிலோன் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவா் சுமித் விஜேசிங்க, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் கடந்த 10ஆம் தேதி முதல் எரிபொருள் நஷ்டத்தில் விற்கப்பட்டு வந்தது. அதனை ஈடுகட்ட விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கையின் ரூபாய் மதிப்பு சுமார் 30% குறைந்துள்ளதால், பல்வேறு பொருள்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் கைபேசி கட்டணங்கள் 30 சதவீதமும், விமானக் கட்டணங்கள் 27 சதவீதமும் அதிகரிக்கும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து வருவதால், இறக்குமதி பொருட்களுக்கு தேவையான தொதையை செலுத்த முடியாமல் அத்தியாவசிய பொருள்களான பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை காலியாகும் சூழல் ஏற்பட்டது. இதனைத் தடுப்பதற்கு இலங்கையில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து கடந்த மாதம் 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வாங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.