சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் இன்று(பிப்..10) அதிகாலையில் யாரோ மர்ம நபர்கள் திடீரென்று பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியபோது, அதிகாலை 1.30 மணிக்கு அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவத்தில் தி.மு.க.வின் பங்கு இருந்தது. தற்போது இந்த சம்பவத்தில் தமிழக அரசின் (பங்கை) நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்து காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளோம். ஆகவே இது போன்ற சம்பவங்களை கண்டு பா.ஜ.க. அச்சம் கொள்ளாது என்று கூறினார்.
இந்நிலையில் பாஜக அலுவலகத்தில் கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. இவர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவர் பணத்துக்காக பெட்ரோல் குண்டு வீசுவதை வழக்கமாகக் கொண்டவர். 2015ஆம் ஆண்டு டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு, 2017 ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட வழக்குகளில் இவர் கைதாகியுள்ளார். இது போன்று காசுக்காக செயல்படும் கருக்கா வினோத் தற்போது பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.