தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தென் மாவட்டத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகர்க் தெரிவித்துள்ளார். கோவை பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளாக இருக்கின்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசு தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் பானு பிரதாப் தெரிவித்துள்ளார். அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேசத்துக்கு விரோதமாக யார் நடந்து கொண்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என பானு பிரதாப் கூறியுள்ளார்.