பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு தமிழக அரசு குறைக்காதது ஏன்? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு வரியை குறைத்ததோடு நில்லாது, மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து நுகர்வோருக்கு ஏற்பட்டிருக்கும் சுமையை குறைக்க வேண்டும் என்று எல்லா மாநிலங்களையும் கேட்டுக் கொண்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவைத் தொடர்ந்து பாஜக ஆளும் பல அரசுகள் இதை பின்பற்றி வாட் வரியை குறைத்து வருகின்றனர். புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை ஏழு முதல் எட்டு ரூபாயும், டீசல் விலையை ஒன்பது முதல் பத்து ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலையானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 55 காசும், டீசல் விலை 19 ரூபாய் குறையும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். மேலும் இதர பாரத ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்கள் குஜராத், கர்நாடகா, கோவா, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் 7 ரூபாயும், உத்தரப்பிரதேச மாநிலங்களில் 12 ரூபாயும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நம் தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு திமுக அரசு மாநில அரசு வரியை குறைக்க வேண்டுமென்று குரல் கொடுத்தது. தேர்தலுக்கு முன்னதாக கூட திமுக அரசு தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்பதாக வாக்குறுதி தெரிவித்திருந்தது. இப்போது மத்திய அரசு தங்களுடைய பங்கில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்துள்ளபோது தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காதது ஏன்? தமிழக அரசு இன்னும் மௌனம் காப்பது ஏன்? தமிழக அரசு தீபாவளி பரிசாக மக்களுக்கு வரி சுமையை குறைக்க முன்வருமா? மத்திய அரசின் வேண்டுகோளை நிறைவேற்றுமா? அல்லது வழக்கம்போல நாடகத்தின் ஈடுபடுவார்களா? என்று அவர் தெரிவித்துள்ளார்.