நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையானது அதிகரித்து வருகிறது. தமிழகம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனைத்தொடர்ந்து, பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான தங்கள் மாநில அரசின் வரியை குறைத்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானிலும் பெட்ரோல்-டீசல் விலை மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோல் மீதான வாட் வரியில் 4 ரூபாயும், டீசல் மீதான வாட் வரியில் 5 ரூபாயும் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.