இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வதற்கு தாலிபான்களே காரணம் என்று பாஜக எம்எல்ஏ கூறியிருப்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த அதிகாரத்தை பாஜக அரசு வழங்கியது.
இந்நிலையில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு ரூ.100 ஐ எட்டியது. அதேபோல் டீசல் விலையும் 100 ஐ எட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி சமையல் கேஸ் சிலிண்டர் ரூபாய் 900 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கேஸ் விலை உயர்வால் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாடு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பினர் நெருக்கடியால் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது என்றும், விலை உயர்வுக்கான காரணங்களை தெரிந்து கொள்ள வாக்காளர்கள் தற்போது முதிர்ச்சி அடைந்து உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.