பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் பெட்ரோல் பங்கில் தூங்கிகொண்டிருந்த நபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில், பேருந்து ஓட்டுநரான ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தான் ஓட்டும் தனியார் பேருந்தை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை காலை நேரத்தில் ஆறுச்சாமி பின்னோக்கி இயக்கியுள்ளார். அந்தசமயம் பேருந்தின் பின் சக்கரம் அருகே ஒரு வாலிபர் தூங்கிக்கொண்டிருந்தார். இதனை கவனிக்காமல் ஆறுச்சாமி பேருந்தை பின்னோக்கி இயக்கியதால் அந்த வாலிபர் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை பாத்ததும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கோஷம் எழுப்பியுள்ளனர்.
இதனைக் கேட்டதும் ஆறுச்சாமி பேருந்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்த போது, அடையாளம் தெரியாத வாலிபர் உடல் நசுங்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆறுச்சாமியை கைது செய்யததோடு, இறந்த வாலிபரின் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.