பெட்ரோல் பங்கில் எண்ணெய் திருடி சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் புதுக்கூரைபேட்டை புறவழி சாலையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அலுவலக அறையில் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பெட்ரோல் போடும் இயந்திரம் அருகே வைக்கப்பட்டிருந்த 2000 ரூபாய் மதிப்புள்ள 5 லிட்டர் எண்ணெய் கேன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து ஊழியர்கள் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வந்து 60 வயது மதிக்கத்தக்க முதியவர் 5 லிட்டர் எண்ணெய் கேனை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.