திடீரென குடோன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் பின்புறம் ஒரு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பழைய பெட்ரோல் பம்புகள் உள்ளிட்ட சில பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்தனர். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் இது தொடர்பாக திருநாவலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.