ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா டீல் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைனில் ரஷ்ய ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முதலில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டியபோது பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மார்ச் 8ம் தேதி 130 டாலரை தொட்டு பெரும் பீதியை கிளப்பியுள்ளது. எனினும் உக்ரேன்- ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியதால் கச்சா எண்ணை விலை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது.
சர்வதேச அளவில் ரஷ்யா இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா டீல் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்திய ஆய்வு நிறுவனம் ஆர்டெர் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஒரு பேரலுக்கு 20 முதல் 25 வரை தள்ளுபடி வழங்கி உள்ளதாக கூறுகின்றனர். ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது எனினும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் வரலாற்றில் யார் பக்கம் இருக்கிறோம் என்பதை இந்தியா முடிவு செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கா கூறியுள்ளது. இதனையடுத்து ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.