நாட்டில் எரிபொருள் துறையின் மீது கவனம் செலுத்தியிருந்தால் நாட்டிற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ஜூன் மாதத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி தற்போது வரை பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையே 700 கோடி மதிப்பிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் நாகையில் காவிரி படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு பேசிய அவர், “எரிபொருள் துறை மீது முன்னரே கவனம் செலுத்தியிருந்தால், நாட்டின் நடுத்தர வர்க்கம் (பெட்ரோல் விலையால்) இன்னல் படும் நிலை ஏற்பட்டிருக்காது. தற்போது தொடங்கப்பட்டுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே முக்கியமானவை”என்று தெரிவித்துள்ளார்.