மதுரை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ஒரு விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்கி இருக்கும் பி.எட் படிக்கும் மாணவி மற்ற பெண்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்புவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமரி உத்தரவின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விடுதிக்காப்பாளர் ஜனனியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது விடுதியில் தங்கி இருக்கும் காளீஸ்வரி என்பவர் செல்போனில் பெண்கள் உடை மாற்றுவது, பனியன் நைட்டியுடன் இருப்பது மாதிரியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காளீஸ்வரியை போலீசார் பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அப்போது காளீஸ்வரி கூறியதாவது, நான் இந்த விடுதியில் தங்கி கல்லூரியில் பி.எட் படித்து வருகிறேன். செல்போனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது எனது பொழுதுபோக்காகும்.
இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் விடுதியில் தங்கி இருக்கும் பெண்கள் உடை மாற்றுவது பனியன் அணிந்தபடி சுற்றுவது போன்றவற்றை வீடியோ எடுத்தேன். ஆனால் அவர்கள் அந்தரங்கமாக இருப்பதையோ, குளிப்பதையோ புகைப்படம் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆஷிக் என்பவருக்கு காளீஸ்வரி ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியது தெரியவந்தது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான ஆஷிக்குடன் காளீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பெண்களின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து அனுப்ப முடியுமா? என ஆஷிக் கேட்டதால் காளீஸ்வரி கடந்த 3 மாதங்களாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பி வந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் ஆஷிக் மற்றும் காளீஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடவில்லை என ஆஷிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.