ராஜஸ்தான் அரசு 2022-2023 பட்ஜெட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூபாய்.200 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறது என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மம்தா பூபேஷ் தெரிவித்து இருக்கிறார். மேலும் இது தொடர்பாக மம்தா பூபேஷ் கூறியிருப்பதாவது “மாநிலம் முழுதும் நான் சக்தி உதான் திட்டம் படிப் படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே இது போன்ற திட்டம் பெரியளவில் செயல்படுத்தப்படும் முதல் மாநிலம் ராஜஸ்தான் ஆகும். கிராமப் புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.
இத்திட்டத்திற்காக 2022-23 நிதி ஆண்டில் ரூபாய்.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 33 மாவட்டங்களில் 60,361 அங்கன்வாடி மையங்களில் 1.15கோடி பயனாளர்களுக்கு, மாநிலத்தில் 34,104 அரசுப்பள்ளிகளில் 26.48 லட்சம் பயனாளர்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது. சென்ற ஒரு வருடத்தில் மட்டும் ராஜஸ்தானின் மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் 31 மாவட்டங்களில் 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் 31,255அங்கன்வாடி மையங்களுக்கும் இந்த சானிட்டரி நாப்கின்களை வழங்கியிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதற்கென மொத்தம் ரூபாய்.104.78 கோடியை ஆர்.எம்.எஸ்.சி.எல் செலவிட்டுள்ளது” என்று அவர் கூறினார்.