ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “ஆப்கானில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்களுடைய ஆட்சியில் பெண்களுடைய உரிமை பாதுகாக்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள் வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களை மேம்படுத்த நாங்கள் உதவுவோம்.. பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். ஆப்கானிஸ்தானில் தனியார் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படலாம். பத்திரிக்கை ஊடகங்கள் நடுநிலையாக செயல்படவேண்டியது அவசியம் கிடையாது. எங்களை பற்றி தாராளமாக ஊடகங்கள் விமர்சிக்கலாம். ஆப்கானிஸ்தானில் வாழும் வெளிநாட்டவர்கள் யாரும் எங்களை பார்த்து பயப்படத் தேவையில்லை.
விமான நிலையங்கள் காத்திருப்பவர்கள் வீடு திரும்பலாம். அவர்களுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. இஸ்லாமிய சட்டவிதிகளை மாற்றாக எதையும் நாங்கள் செய்ய மாட்டோம். ஒரு சகோதரனை போல உங்களுக்கு பதிலளிப்போம். அமெரிக்க ஆதரவோடு மக்களின் வீடுகளுக்கு அத்துமீறி நுழைய வேண்டாம் என்று தலிபான் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அஷ்ரப் கனி தலைமையிலான ஆப்கன் அரசு எங்களை அழிக்க 6 மாத ஒரு திட்டத்தை அறிவித்தது. அந்த ஆறு மாதங்களில் அமெரிக்க படைகளால் எங்களில் பலர் கொல்லப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.