ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். இந்த நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுகின்றது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. பெரும்பாலான நாப்கின்கள் வியாபர நோக்கத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்ஸின் என்னும் வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது.
நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் தயாரானது. 2-வது லேயர் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் உருவான ப்ளீச் செய்யப்பட்ட டிஸ்யூ காகிதத்தால் தயாரிக்கப்படுகிறது. 3-வது லேயர் ஈரப்பதத்தை தக்கவைக்கும் ஜெல்லாலும், 4-வது லேயர் லீக் ஆகாமல் இருப்பதற்கான பிளாஸ்டிக் லேயரால் தயாரிக்கப்படுகிறது. பெண்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக நீண்ட நேரம் நீடிக்கக்கூடிய நாப்கின், அல்ட்ரா தின், எக்ஸ்ட்ரா லாங், லாங் நைட் என விளம்பரப்படுத்துகின்றனர்.
ஆனால் இவற்றில் உயிருக்கு ஆபத்தைத் தரக்கூடிய கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. நாப்கின் வாங்கும் போது அதில் சேர்க்கப்பட்டிருக்கும் ரசாயனங்களைப் பார்த்து வாங்கவேண்டும். இதில் டயாக்சின் சேர்க்கப்பட்டிருந்தால் தவிர்ப்பது நல்லது. இந்த ரசாயனத்தின் மூலம் பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு, நோய் தடுப்பாற்றல் குறைவு, கருமுட்டை உற்பத்தி திறன் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது.