கேரளா மாநிலமான ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரா பகுதியில் வசித்து வரும் பிளஸ்-1 மாணவியுடன், சமூக வலைதளம் மூலம் நபர் ஒருவர் பழகியுள்ளார். இதையடுத்து மாணவியிடம் பழகி அவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியுள்ளார். அதன்பின் ஒரு வாரத்திற்கு முன்பாக அந்த நபர் மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரை கடத்தி சென்றுள்ளார்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் மாணவியை கடத்தி சென்றவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் மொபைல் மூலமாக சைபர்செல் உதவியுடன் தேடியபோது, மாணவி திருச்சூரில் இருப்பதாக தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தியா என்பவரை கைது செய்தனர். அதன்பின் சந்தியாவிடம் நடத்திய விசாரணையில், இவர் ஆண் வேடம் அணிந்த பெண் என்பதும், கடந்த 2016-ல் 14 வயது சிறுமியை இதுபோன்று தொல்லை கொடுத்து கடத்திச் சென்றதும் தெரியவந்தது. எனினும் இவர் எதற்காக மாணவியை தற்போது கடத்திச் சென்றார் என்பது தெரியவில்லை. மாணவியை மீட்ட காவல்துறையினர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வாறு மாணவியை வீட்டில் இருந்து ஏமாற்றி கடத்திச் சென்ற சந்தியாவை காவல்துறையினர் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சந்தியாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இவர் திருவனந்தபுரம் மாவட்டம் வீரன்னபுரம் பகுதியில் வசித்து வந்ததும். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் சந்தியா மனநிலை சரியிலாதவர் என கூறப்படுகிறது. இவர் சமூக வலைதளங்களில் ஆண் வேடத்தில் தோற்றம் அளித்து, ஆணின் புனைப்பெயரில் சிறுமியை தொடர்பு கொண்டு நட்புடன் பழகி வந்ததாக தெரிகிறது.