முகநூலில் அழகான இளைஞரின் புகைப்படத்தை பயன்படுத்தி காதலிப்பதாக கூறி சாட்டிங் செய்து நகை மற்றும் பணத்தை பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்க நினைத்துள்ள லோகேஷ் முகநூலை பயன்படுத்தி குறுக்கு வழியில் சென்றதால் இப்போது கம்பி எண்ணுகிறார். சென்னையில் வசித்து வரும் இளம் பெண் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் நிஷாந்த் என்பவர் என்னை காதலிப்பதாக நடித்து வாட்ஸ்அப்-இல் சாட்டிங் செய்தார். மேலும் அந்த சாட்டிங்கை வெளியிடுவதாக கூறி பெண்ணிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறித்ததாக கூறியுள்ளார்.
அந்தப் பெண் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் லோகேஷை கைது செய்தனர். அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதில் +2 படித்து விட்டு பிஇ பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்ததால், பணக்கஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் சுலபமான வழியை கண்டுபிடித்துள்ளார். அதன் பின்னர் முகநூலில் நிஷாந்த், விமலேஷ், விமல் போன்ற போலியான பெயர், முகவரி, மற்றும் புகைப்படத்தையும் உருவாக்கியுள்ளார்.
இதன் மூலமாக கல்லூரி மாணவியர் மற்றும் திருமணமான பெண்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் வாட்ஸ்அப் எண்களை வாங்கி சாட்டிங் செய்து வந்திருக்கிறார். அதன் பின்னர் அவர்களை காதலிப்பதாக நடித்து குடும்பச் செலவு, மருத்துவ செலவு, என்று கூறி நகை,பணம் பறித்துள்ளார். அதை நம்பாத பெண்களிடம் அந்தரங்கம் உரையாடல் செய்யும் அளவிற்கு பழக்கம் ஏற்பட்ட பின்பு அதனை வெளியிடுவதாக கூறி மிரட்டி நக, பணம் பறித்துள்ளார்.
மேலும் மருந்து, மாத்திரைகள் என்று கூறி நகைகளை கொரியர் மூலமாக அனுப்பச் சொல்லி அதனை வாங்கி இருக்கிறார். இவ்வாறு 15 பெண்களிடம் இருந்து 13 1/2 பவுன் நகைகளையும், லட்சக்கணக்கான ரூபாயையும் பறித்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி போன்ற தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த பெண்களையும் மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளன.
லோகேஷ் இந்தப் பெண்களை ஒரு முறை கூட நேரில் சந்திக்கவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் லோகேஷ் எத்தனை பெண்களை இவ்வாறு மோசடி செய்து நகை, பணம் பறித்துள்ளார் என்பதை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.