சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பர்கான் தசீர்கான் (35) என்பவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர் தற்போது ஒடிசாவில் வசித்து வருகிறார். அவருக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. இருந்தாலும் அதிக பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம் என்று யோசித்து உள்ளார். இதற்காக இணையத்தில் தனியாக ஐடி உருவாக்கி தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தன்னை பிடித்தவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தான் இன்ஜினியரிங் படித்து தொழில் செய்து வருவதாகவும் வருடத்திற்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். பெண்களை கவரும் வகையிலான தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை உண்மை என நம்பி பல பெண்கள் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இவர் கூறியதை நம்பி கர்நாடகா, உத்திரப் பிரதேசம்,பீகார் மற்றும் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்து உள்ளனர்.
அவர்களிடம் இருந்து இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை பணம் பறித்துள்ளார். இதில் ஒரு பெண் மருத்துவரும் ஏமாந்து உள்ளார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் அந்த நபரை கைது செய்து சொகுசு கார், செல்போன், ஏடிஎம் கார்டுகள்,சிம் கார்டுகள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இதுபோன்ற நபர்களிடம் பெண்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.