மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் ராதாகிருஷ்ணன்- மங்களம்(62) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மங்களம் அப்பகுதியில் இருக்கும் சாலை ஓரம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அந்த மர்ம நபர்கள் மங்களத்திடம் பேசிக் கொடுத்து திடீரென மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து மங்களம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.