பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும் போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும். இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால் பிற புற்றுநோய்களை பொறுத்தமட்டில், நோயால் பாதிக்கப்பட்ட பின்பே சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து தடுப்பூசிக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி இன்று அறிமுகமாகிறது.