மகேஷ் மஞ்ச்ரேக்கர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு படங்களிலும் நடித்தவர் மகேஷ் மஞ்ச்ரேக்கர். மேலும் அஜித் நடித்த ஆரம்பம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சில படங்களையும் இயக்கி உள்ளார். மேலும் பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இவர் மீது போக்சோ சட்டம் போடப்பட்டுள்ளது. இது குறித்து திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மகேஷ் மஞ்ச்ரேக்கர் ‘நய் வரன் பாட் லோன்சா கோன் நய் கோன்சா’ என்ற மராத்தி படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் கடந்த மாதம் வெளியானது.
இதில் குழந்தைகள் மற்றும் பெண்களை ஆட்சேபகரமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. மேலும் இந்தப்படத்தை எதிர்த்து ஷத்திரிய மராத்தா சேவா சன்ஸ்தா அமைப்பினர் பாந்த்ரா மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் இயக்குநர் மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ நீதிமன்றம் இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து பேசிய மகேஷ் மஞ்ச்ரேக்கர் படம் தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டபோது அவர்கள் எந்த ஆட்சேபனைக்குரிய கருத்தையும் கூறவில்லை. இது வயது வந்தோருக்கான படம். பார்வையாளர்களை கவர வேண்டும் என்று நினைக்கவில்லை பெண்களை மோசமாக சித்தரிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் நான் இதுவரை 25 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளேன். பல வருடங்களுக்கு முன் நான் ரசித்த கதை இது. இது ஒரு பத்திரிகையாளரால் எழுதப்பட்டது. அதை திரைப்படமாக தற்போது எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியான போதே பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.