வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம்.
வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே.
வாழைப்பூ மருத்துவ குணம்:
வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும். ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற, வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை உதவுகிறது.
இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது. இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி, அதனால் வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்றும் வல்லமை, வாழைப் பூவுக்கு உண்டு.
செரிமானத்தன்மை அதிகரிக்கும். மலச்சிக்கலைப் போக்கும், சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் குணம் கிடைக்கும்.
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும்.
இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும். கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.