பெண்கள் வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஒரு வருடமாக தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு தலிப்பான்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதிலிருந்து ஆப்கானிஸ்தானில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பெண்களுக்கு எதிராக பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் கல்வி கற்க கூடாது என அறிவித்தனர்.
இந்நிலையில் மீண்டும் புதிதாக ஒரு அறிவிப்பை பிறப்பித்துள்ளனர். அதன்படி பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்க கூடாது என அதிரடியாக கூறியுள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டிற்கு செல்வதற்கு மாணவிகளும் மாணவர்களும் விமான நிலையத்திற்கு சென்றனர். இதில் மாணவர்களை மட்டும் விமானத்தில் செல்வதற்கு அனுமதித்த தலிபான்கள் மாணவிகளை திருப்பி அனுப்பி விட்டனர்.
இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களின் கல்வியை புறக்கணிக்க கூடாது எனவும், பெண் குழந்தைகளை கல்வி கற்பதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. மேலும் பெண்கள் கல்வியை புறக்கணிக்கும் தலிபான்களுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.