சீனாவில் கட்டுமான பணியின்போது கீழே தவறி விழுந்த பெண்ணின் உடலுக்குள் நுழைந்த இரும்பு கம்பியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
சீனாவில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்த ஒரு பெண் பத்து அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்த போது அவரின் உடலுக்குள் கம்பி ஒன்று நுழைந்துள்ளது. அதனைக் கண்ட சக வேலையாளிகள், கம்பியில் சிக்கி கொண்டிருந்த சியாங் என்ற அந்தப் பெண்ணை, கம்பியை அறுத்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்தக் கம்பி பெண்ணின் உடம்புக்குள் பின்புறம் வழியாக நுழைந்து, அவரின் தோள் பகுதி வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.
அந்தப் பெண்ணை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவரின் உடலில் நுழைந்த அந்த கம்பி உடலின் முழு நீளத்தையும் ஆக்கிரமித்த போதிலும், அவரின் முக்கிய உள்ளுறுப்புகள் மற்றும் முக்கிய ரத்தக்குழாய்கள் எதுவும் பாதிக்கப்படாமல் இருப்பதை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதன் பிறகு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி அறுவை சிகிச்சை செய்து, அந்தப் பெண்ணின் உடலில் இருந்த கம்பியை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது அந்தப் பெண் உடல் நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவ்வளவு நீளம் கொண்ட கம்பி உடலுக்குள் நுழைந்தும், அந்தப் பெண் உயிர் பிழைத்தது உண்மையிலேயே அதிசயம்தான்.