பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கருப்பகவுண்டன் புதூரில் சக்திவேல்- விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 18-ஆம் தேதி விஜயலட்சுமி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் திடீரென விஜயலட்சுமியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் இன்ஜினியரிங் பட்டதாரியான மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(29) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 7 பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.